jramiyar

Friday, October 30, 2009

இந்தியா இதழில் பாரதியார் மாஜினியைப் பற்றி எழுதிய கட்டுரை

மாஜினி

மாஜினி என்ற இத்தாலிய தேசபக்தர் பால இத்தாலி என்ற சங்கம் தொடங்கி வேலை செய்தார். முதற் சருக்கத்தில் தேசபக்தர்களின் பக்கம் தோல்வியடைந்து போய், கொடுங்கோலரசாராகிய ஆஸ்திரியாவின் பக்கமே வெற்றி வாய்ந்து நின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் மாஜினி எழுதியது ( மாஜினி சுவிட்சர்லாந்தில் வாசம் செய்து வந்தான் )
எனது ஆத்மாவிலே வெளி மாறுபாடுகளால் வசப்படுத்தப்படாத ஒரு சக்தி விளஙிகி நின்றது. எனது ஆத்ம நிலை தன்னிலே தானடங்கியதாய் வெளித் தோற்றங்களினால் சலனமடையும் இயற்கையில்லாதது. ஆத்மா தன்னைச் சுழ்ந்திருக்கும் உலகை அடக்கி ஆள வேண்டியது; உலகத்தின் ஆட்சிக்குத் தான் உட்படக்கூடாது என்ற நம்பிக்கை அக்காலத்திலே எனக்கிருந்தது. எனது ஜீவமுறை உள்ளிருந்து வெளியே வீசும் தன்மை கொண்டிருந்தது. வெளியேயிருந்து உள்ளே வீசும் தன்மையுடைத்தன்று.
இத்தாலிய ஜாதியைத் துர்ப்பல நிலைக்குக் கொண்டு வந்த முக்கியமான குறையாதெனில் அது ஸ்வதந்திரத்திலே விருப்பமில்லாமையன்று. அந்த ஜாதியாருக்குத் தமது சொந்தத் திறமையிலே நம்பிக்கையில்லாமையும், எளிதில் சோர்வடைந்து விடுதலும், ஸ்திர சித்தமில்லாமையுமே முக்கிய குறையாகும்.
( ஸ்திர சித்தமில்லாவிடின் தர்மம் கூட பயனற்றதாய் முடியும் ). நம்மவரிடையே உள்ளக் கருத்திற்கும் புறச் செய்கைக்கும் லயமில்லாதிருக்கின்றது. இந்த லயமின்மை மஹா விநாசகரமானது. இதுவே நமது ஜாதியாரின் முக்கிய குறையாகும்.
இந்தப் பெருநோயாத் தீர்க்க ஒரு வழியுண்டு. அதாவது இதனளவுக்குத் தக்கபடி விஸ்தாரமாக லிகிதங்கள் மூலமாகவும், உபந்யாஸங்கள் மூலமாகவும், தேச ஜனங்களுக்கு உபதேசம் புரிவதேயாம்.
மன உறுதியிலேயும் கடைப்பிடிப்பிலேயும் திண்மையுற்று, மனச்சோர்வுக்கு வசப்படாத மனிதர்கள், நிஷ்டூரத்தை உல்லங்கனஞ் செய்து ஒரு பெரிய தர்மத்தின் பொருட்டு அபஜயத்தையும் புன்சிரிப்போடு ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள், இன்று தளர்ச்சியடைந்தாலும் மறுநாள் மீண்டும் உயிர்த்தெழுபவர். எப்பொழுது பார்த்தாலும் மனோயுத்தத்திற்குச் சன்னதமாகிக் காலத்தையும் விதியையும் இகழ்ந்து இறுதி வெற்றியில் நீங்காத பற்று நிரம்பியவர். இத்தன்மை கொண்ட பக்தர்களின் ஸமாஜம் ஒன்று இன்றியமையாதது.
( 21. 11. 1908 இதழ் 7 பக்கம் 5 --- இந்தியா ) மாஜினி

சத்தியாக்கிரஹ ஆசிரமத்தில் காந்திஜி வகுத்துள்ள சட்டதிட்டங்கள்

அஹமதாபாத்தில் காந்திஜி நிறுவிய சத்தியாக்கிரஹ ஆசிரமத்தில் காந்திஜி வகுத்துள்ள சட்டதிட்டங்கள் :
1. சத்தியப் பிரதிக்ஞை
பொய் கூறுவதைத் தவிர்த்தால் மட்டும் போதாது. தேச நலனுக்காகக் கூட சத்தியநெறி மீறப்படக்கூடாது. சத்திய நெறிக்குப் புறம்பாகுமெனில் பெற்றோரையும் பெரியோரையும்கூட் எதிர்க்க வேண்டிய தைரியத்தை சத்திய நெறி உரிமையோடு எதிர்பார்க்கிறது.
2. அஹிம்சை விரதம்
உயிருள்ள பிராணிகளைக் கொல்லாமல் இருப்பது மட்டும் போதாது. தனக்குத் தீங்கு இழைத்தவர்களைக்கூடத் துன்புறுத்தலாகாது. அவர்களிடம் கோபம் கொள்ளலாகாது; மாறாக, அவர்களை நேசிக்க வேண்டும். கொடுமையை எதிர்க்க வேண்டுமே தவிர கொடுமை செய்தவனைத் துன்புறுத்தலாகாது. அவனை அன்பினால் வெற்றி கொள்ளல் வேண்டும். அவனது விருப்பத்துக்கு பணிய மறுத்துச் சாகும் வரை எனினும் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
3 பிரம்மசர்ய விரதம்
இந்த விரதம் இன்றி முதல் இரண்டு விரதங்களை அனுஷ்டித்தல் சாத்தியமற்றதென்றே கூறலாம். பெண்களைக் காம இச்சையோடு பார்க்காமல் இருத்தல் மட்டும் போதாது. மிருக இச்சைகளை அடக்கி ஆளப்படல் வேண்டும். அப்போதுதான் நினைப்பு என்னும் அளவில்கூட எழாமல் அதைத் தடுத்தல் இயலும். திருமணமானவன் தனது மனைவியை ஜீவி. கால சிநேகிதியாக ஏற்றுப் பரிபூரண தூய்மையான ஓர் உறவை அவளுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
4. உணவுக் கட்டுப்பாடு
முறையாக, சுத்தமான உணவுப் பழக்கத்தை கைக்கொள்ளுதல். உடலைப் பாதுகாக்கத் தேவையானவற்றை மட்டுமே உண்டு மிருக இச்சைகளைத் தூண்டக்கூடிய உணவு வகைகளை ஒதுக்கி விடுதல்.
5. திருடாமை
பிறரது உடைமைகள் என்று தெரிந்தவற்றைத் திருடாமல் இருந்தால் மட்டும் போதாது, நமக்கு உண்மையில் தேவையாக இல்லாத பொருட்களை உபயோகித்தலும் கூடத் திருட்டுதான். அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை இயற்கை நமக்கு அளிக்கிறது. அதற்கு மீறிய பொருட்களை அன்றாடத் தேவையாக வைத்துக் கொள்ளுதல் கூடாது.
6. உடைமை மறுப்பு உடைமைகளையும் பெரும் செல்வங்களையும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் இருத்தல் மட்டும் போதாது. நமது உயிர் வாழ்க்கைக்கோ உடல் பராமரிப்புக்கோ மிகமிக அத்தியாவசியத் தேவையானவற்றைத் தவிர வேறெதையும் வைத்துக் கொள்ளாதிருத்தல். எளிய வாழ்க்கை பற்றி இடையறாது சிந்தித்தல்.
உண்மையாகவே பலமற்ற ஒருவன் சத்தியத்தின் பலத்தாலும் ஆத்ம பலத்தாலும் மற்றவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இரவீந்திரநாத் தாகூர் கவிதை

உன் அறைகூவலை யாருமே கேட்காத போதும்,
உறுதியுடன் தனிமையில் மேலே நடந்து செல்; பயத்திலே
சுவரைப் பார்த்து மற்றவர் குமைந்து நிற்கையில்
ஓ! துரதிர்ஷ்டப் பிறவியே!
உன் மனம் திறந்து வெளியே
தனிமையில் நீயே பேசிக் கொள்;
வனாந்திர வெளியை நீ கடக்கும்
பொழுது, மற்றவர் உன்னைத்
தனியே விட்டுப் போனால்,
ஓ! துரதிர்ஷ்டப் பிறவியே!
முட்களின் மீது ரத்தக்கறை படிந்த பாதையில்
உறுதியாக நடந்து செல்!
தனிமையில் நடந்து செல்!
புயல் சூழ்ந்த பயங்கர இரவில்
வழிகாட்டும் ஒளியை
மற்றவர் உணக்கு உயர்த்தத் துணியாத போது,
ஓ! துரதிர்ஷ்டப் பிறவியே!
அடிக்கும் மின்னலிலும் மழையின்
அவதியிலும் உன் இதயத்தையே
நீ விளக்காக ஏற்றிக் கொள் ---
நீயே உனக்கு வழிகாட்டும்
ஒளியாக விளங்கிக் கொள்!

மனிதனிடம் நம்பிக்கை வையுங்கள் - சுவாமி விவேகானந்தர்

ஒருவன் நன்கு படித்தவனாக தோன்றினாலும், படிக்காதவனாக இருந்தாலும் அவனிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். தேவதூதனாகத் தோன்றினாலும், சாத்தானாகவே தோன்றினாலும், அவனிடம் நம்பிக்கை வையுங்கள். முதலில் மனிதனிடம் நம்பிக்கை வையுங்கள். அவனிடம் குற்றங்குறைகள் இருந்தால், அவன் தவறுகள் செய்தால், வளர்ச்சியுறாத மோசமான கொள்கைகளை அவன் பின்பற்றினால், அதற்குக் காரணம் அவனது இயல்பே தாழ்ந்தது என்பதல்ல, உயர்ந்த லட்சியங்களை அவன் அறியாததே உண்மையான காரணம் என்பதை நம்புங்கள். ஒருவன் தவறை நோக்கிப் போகிறான் என்றால், அதன் காரணம் சரியானது அவனுக்கு கிடைக்கவில்லை என்பதே. எனவே தவறிலிருந்து ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால் அவனுக்கு உண்மையைக் காட்டுங்கள். இதைச் செய்யுங்கள். அவன் சீர்தூக்கிப் பார்க்கட்டும். அவனுக்கு உண்மையைக் கொடுங்கள், அதோடு உங்கள் வேலை முடிந்து விட்டது. அவன் தன் மனத்துள், ஏற்கனவே அங்கே இருப்பதுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கட்டும். என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள் -- நீங்கள் உண்மையாகவே உண்மையைக் கொடுத்திருந்தால் பொய் மறைந்தே தீரவேண்டும். வெளிச்சம் இருளைத் துரத்தியே தீரும். உண்மை நன்மையை வெளியே கொண்டுவந்தே தீரும்.
ஆன்மீக வழியில் நாட்டைச் சீர்திருத்த வேண்டுமானால் இதுதான் வழி; சண்டையிடுவது அல்ல; மக்கள் செய்வதெல்லாம் தவறு என்று அவர்களிடம் சொல்வதும் அல்ல. நல்லதை அவர்கள் முன் வையுங்கள். எவ்வளவு ஆர்வத்துடன் அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்; மனிதனில் என்றென்றும் உறைகின்ற, ஒருபோதும் அழியாத தெய்வீகம் விழித்தெழுந்து நல்லதையும் மகத்தானதையும் ஏற்றுக் கொள்ளத் தனது கைகளை நீட்டுவதைக் காண்பீர்கள்.

ஆப்ரகாம் லிங்கன் அவரது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

அவன் கண்டிப்பாகப் படிக்க வேண்டும், நான் அறிவேன், அனைவரும் நேர்மையானவர்கள் அல்ல, அனைவரும் உண்மையானவர்களும் அல்ல. இருப்பினும் நான் அறிவேன் ஒவ்வொரு கயவனுக்குள்ளும் ஒரு சாதனையாளன் ஒளிந்து கொண்டுதானிருக்கிறான் என்று; சுயநலம் படைத்த அரசியல்வாதிகளுக்குள்ளும் ஒரு தியாக சீலன் இருக்கிறான் என்று; ஒவ்வொரு எதிரிக்குள்ளும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதையும் அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.
இதற்கு அதிகக் காலம் ஆகும் என்பதை நான் அறிவேன். ஆனால், உழைக்காமல் வரும் 5 ரூபாயை விட உழைத்துப் பெறும் 1 ரூபாய் மதிப்பு மிக்கது என்பதை முடிந்தால் அவனுக்குக் கற்றுத்தாருங்கள். இழக்கவும் கற்றுத்தாருங்கள்; அதே சமயத்தில் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுத் தாருங்கள்.
பொறாமையிலிருந்து அவனை வெளிக் கொண்டுவாருங்கள்; முடிந்தால், தனிமையில் வாழ்க்கையை அசைப்போட்டு ரசிக்கவும் கற்றுத்தாருங்கள்.
இயன்றால், புத்தகங்களில் புதைந்துள்ள ஆச்சரியங்களை எடுத்துக் கூறுங்கள்; வானத்தில் பறந்து திரியும் பறவைகள், சூரியக் கதிர்களில் சுற்றித்திரியும் தேனீக்கள், அதேபோல் குன்றுகளின் பசுமைகளில் பூத்திருக்கும் பூக்கள் போன்றவற்றில் பொதிருந்திருக்கும் இரகசியங்களையும் ஆழ்ந்து சிந்திக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.
ஏமாற்றுவதை விட தோற்பதே கௌரவமானது என்று கல்விக் கூடத்தில் அவனுக்குக் கற்றுத் தாருங்கள். அவனுடைய கொள்கைகள் சரியானதல்ல என்று ஊரார் குறை கூறினாலும், அதில் முழுப் பிடிப்புடன் இருக்கக் கற்றுத்தாருங்கள்.
அவன், பெருந்தன்மையுடனும் கடினமானவர்களிடம் கடினமாகவும் இருக்க வேண்டும்.
கண்டதே காட்சி கொண்டதே கோலமென்று கும்மாளமடிக்கும் கூட்டத்தினர் பின்னால் கண்மூடிச் செல்லாமலிருக்கவும் என்னுடைய மகனுக்கு மனவலிமையையைத் தாருங்கள்.
ஊரார் பேச்சைக் கேட்டுக் கொள்ளட்டும், ஆனால் உண்மைத்திரை கொண்டு கேட்பவற்றை வடிகட்டி நல்லதை மட்டுமே ஏற்றுக்கொள்ள கற்றுத்தாருங்கள்.
துன்பம் வரும் வேளையில் சிரிக்கவும், கண்ணீர் விடுவதில் எந்த அவமானமும் இல்லை என்றும் உங்களால் முடிந்தால் கற்றுத் தாருங்கள்.
புறம் கூறுபவரைக் கண்டு வெறுக்கவும், அளவுக்கு அதிகமாக புகழ்பவரைக் கண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும் கற்றுத் தாருங்கள்.
அவர்களின் உழைப்பையும் அறிவையும் அதிக விலைக்கு விற்கவும், ஆனால் அதற்காக உள்ளத்தையும் உயிரையும் பணையம் வைக்காமல் இருக்கவும் கற்றுத் தாருங்கள்.
ஊளையிடும் ஓநாய்கள் போன்ற கூட்டத்தினரின் சப்தங்களுக்கு செவிமடுக்காமல் இருக்கவும் அவற்றை எதிர்த்து நின்று போராடும் வல்லமையையும் தாருங்கள்.
அவனைப் பெருந்தன்மையோடு நடத்துங்கள்; அதற்காக கட்டித் தழுவிக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் கொல்லனின் அக்னி பரிட்சை மட்டுமே நல்ல இரும்பை உருவாக்கித் தரும்.
அவன் அவனாகவே இருக்க மனத் துணிவைப் பெறட்டும், அவன் துணிவைப் பெற நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் கற்றுத் தாருங்கள்.
அவனது தன்னம்பிக்கை மீது உயர்ந்த மதிப்பு வைக்கக் கற்றுத்தாருங்கள். ஏனெனில், அதன் மூலமே மனித வர்க்கத்தின் மீது உயர்ந்த நம்பிக்கையை அவனால் வைக்க இயலும்.
இது பெரிய கட்டளையாக இருக்கலாம்; ஆனால், உங்களால் என்ன செய்யமுடியும் என்று பாருங்கள், ஏனெனில் அவனோ ஒரு அருமையான குட்டிப் பையன்.

Wednesday, August 19, 2009

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. மனத்தை இழக்காதவரையில் நாம் எதையுமே இழப்பதில்லை.
- கடலுக்கு அப்பால் - ப. சிங்காரம்